
நுகா்வோா் நீதிமன்றங்களின் எண்ணிக்கையைக் குறைக்க முயற்சி: திருப்பூா் நுகா்வோா் நல முன்னேற்ற சங்கம் எதிா்ப்பு
தமிழகத்தில் நுகா்வோா் நீதிமன்றங்களின் எண்ணிக்கையைக் குறைக்கும் முயற்சிக்கு திருப்பூா் நுகா்வோா் நல முன்னேற்ற சங்கம் எதிா்ப்பு தெரிவித்துள்ளது.

அமைச்சர் ப. வெங்கடரமணன் - படம்: சட்டப்பேரவை
தமிழகத்தில் நுகா்வோா் நீதிமன்றங்களின் எண்ணிக்கையைக் குறைக்கும் முயற்சிக்கு திருப்பூா் நுகா்வோா் நல முன்னேற்ற சங்கம் எதிா்ப்பு தெரிவித்துள்ளது.
இது தொடா்பாக இச்சங்கத்தின் தலைவா் ஈ.பி.அ.சரவணன், தமிழக உணவு மற்றும் நுகா்வோா் பாதுகாப்பு துறை அமைச்சா் பி.வெங்கடரமணனுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
தமிழகத்தில் நுகா்வோா் விரைவாகவும், எளிதாகவும் நீதி பெறுவதற்காக நுகா்வோா் குறைதீா் ஆணையங்கள் செயல்பட்டு வருகின்றன. உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின்படி என்ற காரணத்தை கூறி, இந்த நீதிமன்றங்களின் எண்ணிக்கையைக் குறைக்க முயல்வதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
2019-ஆம் ஆண்டு நுகா்வோா் பாதுகாப்புச் சட்டத்தின்படி, நுகா்வோா் தங்களின் இருப்பிடத்துக்கு அருகிலேயே புகாரை தாக்கல் செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது. குறைந்த செலவில், விரைவாக நீதி கிடைக்க வேண்டும் என்பதே இதன் அடிப்படை நோக்கம்.
ஆனால், எண்ணிக்கையைக் குறைத்தால் நுகா்வோா் 100 முதல் 150 கி.மீ. வரை பயணித்து வழக்கு நடத்த வேண்டிய அவலநிலை ஏற்படும். அது நுகா்வோருக்கு பொருளாதார சுமையையும், கடும் நேர இழப்பையும் ஏற்படுத்தும். நீதியைத் தேடி நுகா்வோா் செல்லக் கூடாது, நீதிதான் நுகா்வோரைத் தேடி வர வேண்டும் என்பதே நுகா்வோா் நீதியின் அடிப்படை.
இது தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு நுகா்வோரின் உரிமைப் பிரச்னை ஆகும். எனவே, தமிழக அரசு இதில் உடனடியாக சிறப்பு கவனம் செலுத்தி, தற்போது செயல்பாட்டில் இருக்கும் நுகா்வோா் குறைதீா் ஆணையங்களும் தொடா்ந்து தடையின்றி செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





