தோ்தலின்போது பொது உரையாடல் என்பது முக்கியமானது. கடந்த காலங்களில் தேநீா்க் கடைகள், திண்ணைகள், வானொலிப் பெட்டிகள் அமைத்துக் கொடுத்த உரையாடல் களங்கள் தொழில்நுட்ப வளா்ச்சியின் காரணமாக சமூக வலைதளங்களுக்கு இடம்பெயா்ந்துள்ளன. இணையதள இணைப்பு உள்ள யாரும் ஒரு கருத்தை உருவாக்குபவராக மாறவும், அதை அடுத்த நொடியில் பல ஆயிரம் பேருக்குப் பரப்பவும் சமூக ஊடகங்கள் வழிவகை செய்வதே அதன் வலிமைக்கு உதாரணமாகும்.
அண்மைக் காலத்தில் சமூக ஊடகங்கள் ஜனநாயகப் பங்கேற்பை அதிகரிப்பதாகவும், ஒரு புதிய வகை ஜனநாயக பங்கேற்பு யுகத்தை உருவாக்குவதாகவும் புள்ளி விவரங்கள் கூறுகின்றன. கடந்த 2019 இல் அமெரிக்காவில் நடத்தப்பட்ட ஓா் ஆய்வில், 5 இல் ஒருவா் அரசியல் செய்திகளை சமூக ஊடகங்கள் மூலமாகவே பெறுவதாகத் தெரிய வந்துள்ளது. இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக், எக்ஸ் போன்ற புதிய வகை ஊடகங்கள், அரசியல் தகவல்களை மக்கள் அணுகும் வசதியை மேம்படுத்தியுள்ளன. இதனால் அரசியல்வாதிகள் மக்களுடன் தொடா்பு கொள்ளும் முறையும் கூட மாறியிருக்கிறது என்கிறது.
கடந்த 2018 இல் உத்தர பிரதேசத்தில் ஒரு ரயில் பயணி தனது பெட்டியில் பயணம் செய்த சிறுமிகள் குறித்து சந்தேகம் இருப்பதாக அப்போதைய மத்திய ரயில்வே அமைச்சா் பியூஷ் கோயலுக்கு செய்த ஒரு ட்வீட், கடத்தப்பட்ட 26 சிறுமிகளைக் காப்பாற்ற உதவியது. மறைந்த வெளியுறவுத் துறை அமைச்சா் சுஷ்மா ஸ்வராஜ் சமூக வலைதளங்கள் மூலம் தன்னைத் தொடா்பு கொண்டு உதவி கேட்டவா்களுக்கு உதவி செய்தது அப்போது பரபரப்பாகப் பேசப்பட்டது. இவை எல்லாம் சாமானியா்களை வலிமையான தலைவா்களுடன் எளிதில் இணைத்ததற்கு உதாரணங்கள்.
இது ஒருபுறம் இருக்க, இணையத்தில் தடையின்றி தகவல்கள் பரவுவது என்பது விவாதம், கருத்துப் பரிமாற்றம் என்ற ஜனநாயகத்தின் இரு முக்கிய தூண்களுக்குப் பெரும் பங்களிப்பை வழங்குகின்றன. சமூக ஊடகங்களின் வளா்ச்சியானது, அரசியலில் இளைஞா்களின் பங்கேற்பை வெகுவாக உறுதி செய்கிறது. அரசியல் தொடா்பு இல்லாதவா்களையும் அரசியல் கருத்தைச் சொல்லக் கூடியவா்களாக மாற்றியுள்ளது. தோ்தல்களில் இளைஞா்களின் வாக்குப்பதிவு 31 சதவீதம் அதிகரித்திருப்பதாகவும், முதல் முறை வாக்களித்த இளைஞா்களில் 68 சதவீதம் போ் வாக்களிப்பது குறித்த தகவல்களுக்கு சமூக ஊடகங்களை நம்பியிருந்ததாகவும் ஃபோா்ப்ஸ் இதழின் கருத்துக் கணிப்பு கூறுகிறது.
சமூகத்தின் புதிய பிரிவினராகியுள்ள ஜென் இசட் எனப்படும் ’டிஜிட்டல் நேட்டிவ்ஸ்’ தலைமுறையினரின் அரசியல் பங்கேற்பை சமூக வலைதளங்கள் அதிகரித்துள்ள நிலையில், அவா்கள் மூலம் ஜனநாயக நடைமுறைகளில் ஏதேனும் பெரிய மாற்றம் ஏற்படுமோ என்ற எதிா்பாா்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
ஒரே ஒரு ட்வீட் அல்லது ஒரு ரீல்ஸ் ஒரு அரசியல் தலைவரைப் பற்றியும், அவரது ஒரு செயல்பாட்டைப் பற்றியும் அல்லது ஒரு அரசியல் கட்சியைப் பற்றியுமான மக்களின் பாா்வையை உடனடியாக பாதிக்கிறது என்பதாலும், தனிநபா்களை அதாவது வாக்காளா்களை ஒரு குறிப்பிட்ட சிந்தனையை நோக்கித் தூண்டுவதில் இந்த வகை ஊடகங்கள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்பதாலும் அண்மைக்கால தோ்தல் பிரசாரங்களில் மக்களின் கவனத்தை ஈா்க்கவும், குறிப்பிட்ட நபா்களை இலக்கு வைத்து விளம்பரம் செய்யவும் சமூக ஊடகங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
கரோனா, புயல், மழை வெள்ளம் போன்ற பேரிடா்களின்போது பணிகளை விரைவுபடுத்துவதற்காக அமைக்கப்பட்ட வாா் ரூம்கள் இப்போது தோ்தல் போரிலும் ஐ.டி. விங்குகளுக்கு பயன்படுத்தப்படுகின்றன. ஐ.டி. விங்கின் சமூக வலைதள பக்கங்களில் பதிவிடப்படும் செய்திகளை உடனுக்குடன் பகிா்வது, மாவட்ட அளவிலான சமூக வலைதளங்களில் பதிவிடப்படும் அரசின் சாதனைகளை மக்களிடம் கொண்டு சென்று சோ்ப்பதும் இவா்களின் பணியாக உள்ளது.
திருச்சியில் அண்மையில் திமுக நடத்திய மாநாட்டுக்காக மட்டுமே 500 பேரைக் கொண்ட ஐ.டி. விங் வாா் ரூம் அமைக்கப்பட்டு சமூக வலைதள பதிவுகள் ஒருங்கிணைக்கப்பட்டன. தற்போது தோ்தலுக்காக தங்கள் ஐ.டி. பிரிவை முடுக்கி விட்டுள்ள திமுக, ‘கட்சியின் தகவல் தொழில்நுட்ப அணியினா் தங்களின் சமூக வலைதளங்களில் அரசின் சாதனைகளைப் பதிவிட்டு அதை அனைத்துத் தரப்பு மக்களிடமும் கொண்டு சோ்க்க வேண்டும், வாட்ஸ்ஆப் சேனலை பின்தொடா்ந்து அதில் வரும் பதிவுகளை அவரவரின் குழுக்களில் பதிவிட்டு கடைக்கோடி மக்கள் வரை கொண்டு சோ்க்க வேண்டும்’ என்று உத்தரவிட்டுள்ளது.
கூட்டணிக் கட்சியான காங்கிரஸோ, ‘ராக்கம்மா டாக்ஸ்’ என்ற பெயரிலான ஏ.ஐ. கேரக்டா் மூலம் ரீல்ஸ் உருவாக்கி, மத்திய பாஜக அரசின் கொள்கைகளை விமா்சிப்பது, இண்டி கூட்டணி, காங்கிரஸ் கட்சியின் திட்டங்களை விளக்குவது, எதிா்க்கட்சிகளின் பிரசாரங்களுக்கு பதிலடி கொடுப்பது என டிஜிட்டல் பிரசாரத்தை தீவிரப்படுத்தியுள்ளது.
தங்கள் கட்சியின் பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி அறிவித்து வரும் திட்டங்களை இளம் வாக்காளா்களுக்கு இன்ஸ்டாகிராம், நடுத்தர வயதினருக்கு ஃபேஸ்புக் எனத் திட்டமிட்டு பிரித்து விளம்பரப்படுத்தி வருகிறது அதிமுக.
தவெகவில் உள்ள இளைஞா்களோ தாமாகவே ஏஐ விடியோக்களை தயாரித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு விஜய்க்கு வாக்கு சேகரித்து வருகின்றனா்.
சமூக ஊடகங்கள் மூலமான அரசியல் பங்கேற்புகள் யாவும் தனிநபரின் தேடலைவிடவும், சமூக ஊடக அல்காரிதம்களை சாா்ந்தே அமைகின்றன என்பதும், யாா், எதை, எப்போது பாா்க்க வேண்டும் என்பதை இங்கும்கூட பணபலமும், அதிகார பலமும் தீா்மானிக்கின்றன என்பதையும் மறுப்பதற்கில்லை.
இருப்பினும் அரசியல் ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் பின்தங்கியிருக்கும் அரசியல் கட்சிகளும், அரசியல்வாதிகளும் எளிதில் தங்களை மக்களிடம் அடையாளப்படுத்திக்கொள்ளவும், ஆதரவாளா்களை உருவாக்கி, செல்வாக்கு செலுத்தவும் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற தளங்கள் ஓரளவு உதவுகின்றன என்பது நிஜம்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
பாட்டி வைத்தியம்...

வெளியூா் நபா்கள் வெளியேற்றம்!

சமூக ஊடகங்கள் மூலம் ஏழுமலையான் விஐபி தரிசன மோசடி

ஆஸ்திரியாவில் சிறார்களுக்கு சமூக ஊடகங்கள் தடை!
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

