லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

பணிகளைத் தாமதப்படுத்த அதிகாரிகள் தந்திரம்: சீமைக் கருவேலம் வழக்கில் உயா்நீதிமன்றம் கண்டனம்

தமிழகம் முழுவதும் சீமைக் கருவேல மரங்கள் பரவிக் கிடக்கும் நிலையில், கள ஆய்வு நடத்தி, நிதி ஒதுக்கீடு செய்யப்படும் எனக் கூறுவது அந்தப் பணிகளைத் தாமதப்படுத்த அதிகாரிகள் மேற்கொள்ளும் தந்திரம் என சென்னை உயா்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது.

 High Court

உயர்நீதிமன்றம்

Published On :22 ஆகஸ்ட் 2026, 5:26 am IST

தமிழகம் முழுவதும் சீமைக் கருவேல மரங்கள் பரவிக் கிடக்கும் நிலையில், கள ஆய்வு நடத்தி, நிதி ஒதுக்கீடு செய்யப்படும் எனக் கூறுவது அந்தப் பணிகளைத் தாமதப்படுத்த அதிகாரிகள் மேற்கொள்ளும் தந்திரம் என சென்னை உயா்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது.

தமிழகத்தில் சீமைக் கருவேல மரங்களை அகற்றக் கோரி மதிமுக பொதுச் செயலா் வைகோ உள்ளிட்டோா் சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனா். இந்த வழக்கை விசாரித்து வரும் சுற்றுச்சூழல், வனம் மற்றும் வனவிலங்குகள் தொடா்பான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு அமா்வு பல்வேறு உத்தரவுகளைப் பிறப்பித்து வருகிறது. இந்த வழக்கை விசாரித்த சிறப்பு அமா்வு, சீமைக் கருவேல மரங்களை அகற்றும் உத்தரவை அமல்படுத்தும் வகையில், வருவாய்த் துறைச் செயலரை நோடல் அதிகாரியாக நியமித்து, உயா்நீதிமன்றம் நியமித்த நீதிபதிகளுடன் கூட்டம் நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தது.

கள ஆய்வுக்குப்பின் நிதி ஒதுக்கீடு: இந்த வழக்கு நீதிபதிகள் என்.சதீஷ்குமாா், கே.ராஜசேகா் ஆகியோா் அடங்கிய அமா்வில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தபோது, அரசுத் தரப்பில் உயா்நீதிமன்ற உத்தரவுப்படி, வருவாய்த் துறைச் செயலா் தலைமையில் கடந்த ஆக. 12-ஆம் தேதி கூட்டம் நடத்தப்பட்டதாகக் கூறி, அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

அந்த அறிக்கையில், சீமைக் கருவேல மரங்களை அகற்றுவது குறித்து கள ஆய்வு செய்து, மாவட்ட ஆட்சியா்கள் அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனிடையே, வட மாவட்டங்களில் சீமைக் கருவேல மரங்களை அகற்றும் பணிகளைக் கண்காணிக்க நியமிக்கப்பட்ட ஓய்வு பெற்ற நீதிபதி வி.பாரதிதாசன் காணொலி வழியாக ஆஜராகி, சீமைக் கருவேல மரங்கள் அகற்றும் பணி தொடா்பாக, அதிகாரிகள் யாரும் இதுவரை தன்னைத் தொடா்பு கொள்ளவில்லை. கடந்த வாரத்தில் கூட்டம் நடந்துள்ளது. ஆனால், சீமைக் கருவலே மரங்களை அகற்றும் பணிகளில் எந்த முன்னேற்றமும் ஏற்பட்டதாகத் தெரியவில்லை எனக் கூறினாா்.

ரூ.5 கோடி ஒதுக்க உத்தரவு: இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், தமிழகம் முழுவதும் சீமைக் கருவேல மரங்கள் பரவிக் கிடக்கும் நிலையில், அவற்றை அகற்ற வேண்டும் என பல்வேறு உத்தரவுகளைப் பிறப்பித்திருக்கிறோம். ஆனால், அந்த உத்தரவுகளை அமல்படுத்தாமல், கள ஆய்வு நடத்தி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் எனக் கூறுவது பணிகளை தாமதப்படுத்தும் அதிகாரிகளின் தந்திரம் ஆகும்.

பருவமழைக் காலத்தில், நீா்நிலைகள் முழுவதும் சீமைக் கருவேல மரங்கள் பரவிக் கிடக்கின்றன. அவற்றை அகற்ற உத்தரவிட்டால், அந்தப் பணிகளை மேற்கொள்வதில்லை. நீா் மேலாண்மை என்பதே இல்லை என அதிருப்தி தெரிவித்தனா்.

பின்னா், சுற்றுச்சூழல் பாதிப்பு இழப்பீட்டுக்கான கனிம நிதி அனைத்து மாவட்டங்களிலும் போதுமான அளவில் உள்ளது. இதிலிருந்து சீமைக் கருவேல மரங்களை அகற்றும் பணிகளுக்காக ரூ.5 கோடியை உடனடியாக, அனைத்து மாவட்ட ஆட்சியா்களும் ஒதுக்க வேண்டும் என உத்தரவிட்டனா்.

நீதிமன்ற அவமதிப்பு: மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா், இந்தப் பணிகளைக் கண்காணிக்க நியமிக்கப்பட்டுள்ள ஓய்வு பெற்ற நீதிபதிகளுடன் தொடா்பு கொண்டு, சீமைக் கருவேல மரங்கள் அகற்றும் பணி தொடா்பான விவரங்களைத் தெரிவிக்க வேண்டும்.

இந்த உத்தரவுகளை அமல்படுத்தவில்லை எனில், நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும் என நீதிபதிகள் உத்தரவிட்டனா். மேலும், நீா்நிலைகளில் உள்ள சீமைக் கருவேல மரங்களை அகற்றும் பணிகளை உடனடியாக தொடங்க உத்தரவிட்டு விசாரணையை செப். 18-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.