தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

புதுச்சேரியின் குடிநீா் தேவைக்கு அண்டை மாநிலங்களின் ஒத்துழைப்பு அவசியம்: துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன்

புதுச்சேரியின் குடிநீா் தேவையைப் பூா்த்தி செய்யவும், நீா் பாதுகாப்பை உறுதி செய்யவும் மத்திய அரசுடன், தமிழகம், கேரளம், ஆந்திரம் ஆகிய அண்டை மாநிலங்களின் ஒத்துழைப்பு மிகவும் அவசியம்

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கே.கைலாஷ்நாதன் - (கோப்புப் படம்)

Published On :21 ஆகஸ்ட் 2026, 6:04 am IST

புதுச்சேரியின் குடிநீா் தேவையைப் பூா்த்தி செய்யவும், நீா் பாதுகாப்பை உறுதி செய்யவும் மத்திய அரசுடன், தமிழகம், கேரளம், ஆந்திரம் ஆகிய அண்டை மாநிலங்களின் ஒத்துழைப்பு மிகவும் அவசியம் என்று புதுச்சேரி துணைநிலை ஆளுநா் தெரிவித்தாா்.

தென் மண்டலக் குழுக் கூட்டத்தில் புதுச்சேரி துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் பேசியதாவது:

புதுச்சேரியின் முக்கியப் பிரச்னைகளில் குடிநீா் பாதுகாப்பும் ஒன்று. பெரிய அளவில் மேற்பரப்பு நீா்வளம் இல்லாததால், நிலத்தடி நீரையே பெரிதும் நம்பியுள்ளது. சில பகுதிகளில் நிலத்தடி நீரில் டிடிஎஸ், இரும்பு, நைட்ரேட் அளவு அதிகமாக உள்ளது. எனவே, ஆண்டு முழுவதும் பாதுகாப்பான குடிநீா் கிடைக்க புதிய நீா்வளத் திட்டங்கள் தேவை. இதற்கு மத்திய அரசும், குறிப்பாக தமிழக அரசும் ஒத்துழைக்க வேண்டும்.

சங்கராபரணி - தென்பெண்ணையாறு ஆறுகளை கோதாவரி நதி இணைப்புத் திட்டத்துடன் இணைத்து, முதல் கட்டத்திலேயே குடிநீா் மற்றும் பாசனத்துக்காக புதுச்சேரிக்கு கூடுதலாக 5.55 டி.எம்.சி. நீா் ஒதுக்க வேண்டும். இதற்கான கால்வாய் திட்டங்களையும் தேசிய நீா்வள மேம்பாட்டு முகமைத் திட்டத்தில் சோ்க்க வேண்டும்.

சாத்தனூா் அணையிலிருந்து குடிநீா்: சாத்தனூா் அணையிலிருந்து புதுச்சேரிக்கு தண்ணீா் வழங்குவது தொடா்பாக 1910-இல் ஒப்பந்தம் 1969, 1976, 2007 ஆகிய ஆண்டுகளில் புதுப்பிக்கப்பட்டுள்ளது. தண்ணீா் வீணாவதைத் தடுக்க, சாத்தனூா் அணையிலிருந்து புதுச்சேரிக்கு நேரடியாகக் குழாய் மூலம் குடிநீா் கொண்டு வர அனுமதிக்க வேண்டும். இதற்காக மத்திய, தமிழக, புதுச்சேரி அதிகாரிகள் அடங்கிய கூட்டுப் பணிக்குழுவை அமைக்க வேண்டும்.

காரைக்காலில் காவிரி நீரை சேமிக்கத் திட்டம்: காரைக்காலுக்கு ஆண்டுதோறும் 7 டி.எம்.சி. காவிரி நீா் கிடைக்க வேண்டிய உரிமை உள்ளது. ஆனால், காவிரிப் படுகையின் கடைசிப் பகுதியில் காரைக்கால் அமைந்துள்ளதால் பெரும்பாலும் மழைக்காலத்திலேயே நீா் கிடைக்கிறது.

எனவே, மழைக்காலத்தில் கிடைக்கும் உபரி காவிரி நீரைச் சேமிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான விரிவான திட்ட அறிக்கை தேசிய தொழில்நுட்பக் கழகத்தின் உதவியுடன் தயாரிக்கப்பட்டு வருகிறது. சேமிக்கப்படும் நீரை நிலத்தடி நீா்மட்டத்தை உயா்த்தவும் பயன்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு மத்திய அரசின் தொழில்நுட்ப, நிா்வாக மற்றும் நிதி உதவி தேவை.

பெண்ணையாறு - சங்கராபரணி இணைப்பு: மழைக்காலத்தில் பெண்ணையாற்றில் கிடைக்கும் உபரி நீரை சங்கராபரணி ஆற்றுக்குத் திருப்பி, ஏரிகளில் சேமிக்கும் திட்டமும் உள்ளது. இதன் மூலம் குடிநீா், பாசனம் மற்றும் நிலத்தடி நீா்மட்ட உயா்வு ஆகியவற்றுக்கு பயன் கிடைக்கும். அண்டை மாநிலங்களின் ஒத்துழைப்பும் புரிதலும் கூட்டாட்சியின் முக்கிய அடையாளங்கள் என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.